மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஆகஸ்ட் 18,19,20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.08.2023) தலைமைச் செயலகத்தில் நடத்தினார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது.
இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும். இதுவரை ஒரு கோடியே 54 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசிச் செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய நாளில் விண்ணப்பம் பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்குச் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் விண்ணப்பப் பதிவு முன்னேற்றம் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளை வரையறை செய்து ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால், பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் கீழ் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கும், இந்தத் திட்டத்தில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பரிசீலித்த முதலமைச்சர், வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் விதிவிலக்கு அளிக்க ஆணையிட்டுள்ளார்.
22.07.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், இலங்கை அகதிகளுக்கான (முதியோர், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்) ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு முதியோர் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூபாய் 1200-ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒரு நபர், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலும், அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியத்திலும் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்ததால், அக்குடும்பத்தில் உள்ள பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற இயலாது என்று திட்ட விதி வகுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் விரிவாக ஆய்வு செய்தார்.
முதியோரின் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்த அரசு முதியோர் ஓய்வூதியத்தை வழங்குகிறது. முதியோரைப் பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பத்தின் கடமை மட்டுமல்ல, சமூகத்தின் கடமை என்றும் அரசு கருதுகிறது. அதேவேளையில் அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பலன் பெறுவது தடைபடக்கூடாது என்று முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். எனவே, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தற்பொழுது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கெனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இன்று நடைபெற்ற முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா இ.ஆ.ப, உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.