நீட் தேர்வால் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு திமுக தான் பொறுப்பு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் பாதயாத்திரையை 16வது நாளாக மேற்கொண்ட அண்ணாமலை, திருச்செந்தூரை சென்றடைந்தார். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளை சந்தித்து, கேடயம் வழங்கி
கௌரவப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, நீட்
தேர்வின் தோல்வியால் மாணவரும் அவரது தந்தையும் உயிரிழந்தப்பது
வருத்தமளிக்கிறது என்றார்.
நீட் தேர்வில் ஏராளமான ஏழை மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகிறார்கள் என்றும் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதாக தெரிவித்தார். மேலும் அரசில்வாதிகள் நீட்-ஐ வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றும் குறிப்பாக நீட் தேர்வை வைத்து, திமுக மோசமான அரசியலை செய்கிறது என கடுமையான விமர்சித்தார்.
தெலுங்கானவில் அரசு பள்ளிகளில் நீட் தேர்விற்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் அரசு பள்ளிகள் ஏன் நடத்தப்படவில்லை என்று வினவினார். மேலும் திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் எத்தனை அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் நீட் தேர்வினை நீட்டாக பாருங்கள் என்றும் எந்த கல்விக்கு தகுதித்தேர்வு இல்லை என்றும் கேள்வி எழுப்பிய அவர் நீட்டினால் இன்னுமொரு உயிர் போனால் அதற்கு திமுகதான் காரணம் என குற்றம்சாட்டினார். மேலும் ஆளுநரின் தேநீர் விருந்தை அரசியல் காரணங்களுக்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்துள்ளதாகவும் அண்ணாமலை கூறினார். அதோடு, திமுக ஆட்சியில் சாதிய மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.