மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கூட்டம் இல்லாத நிலையில், 25 லட்சம் பேர் பங்கேற்றதாக பொய்யான தகவல்களைக் கூறி வருகின்றனர் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்றது எழுச்சி மாநாடு அல்ல; அது எடப்பாடி பழனிசாமிக்கு வீழ்ச்சி மாநாடு. இந்த மாநாட்டுக்காக அவர் இவ்வளவு செலவு செய்திருந்தாலும், அதிகபட்சமாக 2.50 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர். 25 லட்சம் பேர் பங்கேற்றதாகக் கூறுவது பொய்யான தகவல். அவருக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் கொடுத்திருப்பது புரட்சி என்ற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். துரோகத் தமிழர் என்ற பட்டம் வேண்டுமானால் கொடுத்திருக்கலாம்.
கொரோனா காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய இப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர் கொடுத்த வாக்குறுதிக்கு நேர்மாறாக செயல்படுகிறார். எனவே, எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஸ்டாலினுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.
பாஜகவுடன் எனக்கு என்றைக்குமே உறவு கிடையாது. அங்கு எனக்கு நண்பர்கள் மட்டுமே உள்ளனர். தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். கூட்டணி அமையும்போது, தேசியக் கட்சிதான் தலைமை வகிக்கும் என்பதே சரியாக இருக்கும். ஆட்சிக்கு மீண்டும் திமுக வரக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருப்பதால், அதற்கான கூட்டணியில் இடம் பெற தயாராக இருக்கிறோம். கூட்டணி இல்லை என்றாலும் தனித்துப் போட்டியிடுவோம்.
காவிரியில் தண்ணீர் தர கர்நாடகா மறுப்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பதுதான் சரியாக இருக்கும். சிஏஜி அறிக்கையில் கூறியுள்ளபடி ஊழல் நிகழ்ந்திருந்தால் மக்கள் தீர்ப்பளிப்பர்”
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.