மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் திருவாவடுதுறை மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை
வாய்ந்த மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்மன் மயில் உருவில் இறைவனை
பூஜித்ததாக புராண வரலாறு கூறும் இந்த ஆலயம் தேவாரப்பாடல் பெற்றதலம். 160 அடி
உயரத்தில் 9 நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் மிக பிரமாண்டமான இவ்வாலயத்தின்
கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை நடைபெற்றது. இதனை
முன்னிட்டு கடந்த 27ம்தேதி பூர்வாங்க பூஜைகள் துவங்கப்பட்டு யாக சாலை பூஜைகள்
துவங்கி நடைபெற்றது.
8ம் கால யாகசாலை பூஜை திருவாவாடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் துவங்கியது. 123 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உத்தம யாகசாலையாக பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜையில் சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு மகா பூர்ணாகுதி செய்யப்பட்டது. தொடர்ந்து 123 குண்டங்களுக்கும் மகாதீப ஆராதனை செய்யப்பட்டு எட்டு கால யாகசாலை பூஜை நிறைவடைந்தது.
பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. கருவறை கோபுரம், சன்னதி கோபுரம் ,ராஜகோபுரம் ,சுவாமி அம்பாள் கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுர
கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் வேதியர்கள் மந்திரம் ஓதி புனித நீர் ஊற்றி மகா
கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான
தேசிக பிரமாச்சாரியார் சுவாமிகள், செங்கோல் ஆதீன மடாதிபதி, மாவட்ட ஆட்சியர்
திரு மகாபாரதி இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஜெயராமன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு டோக்கன் வைத்திருந்த 4000 பேர் மட்டுமே
ஆலயத்திற்குள் பலத்த பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும்
சாலைகள் மற்றும் வீட்டு மொட்டை மாடிகளில் நின்று மிகுந்த சிரமத்துடன் சாமி
தரிசனம் செய்தனர்.