செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்திருப்பது தார்மீக அடிப்படையில் சரியானதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் மறுத்து விட்டன.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி ராமச்சந்திரன் என்பவரும், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தனும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது..
” செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும். அமைச்சராக செந்தில் பாலாஜி தார்மீக ரீதியாக சரியானது அல்ல.” எனக் கூறி இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்பட்டுள்ளன.