சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தெரிவிக்கையில்,
“தமிழக மாணவர்களிடம் சந்திராயன்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய சந்திரனையும், சூரியனையும் ஆய்வு செய்கின்ற நோக்கில் ஏவப்பட்ட விண்கலங்களால் எப்பொழுதும் இல்லாத வகையில் புது வகையாக தெம்பும் நம்பிக்கையும் ஈடுபாடும் ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். காரணம் இரண்டின் திட்ட இயக்குநர்களாக தமிழ்நாட்டின் வீரமுத்துவேல் மற்றும் நிகர்ஷாஜி ஆகியோரின் அளப்பறிய ஆற்றலும் அறிவுத்திறனும் தான் ஆகும். கடந்த காலங்களில் பி எஸ் எல் வி ராக்கெட்டுகள் செலுத்தப்பட்ட பொழுது அது என்ன செய்கின்றது, அதனால் என்ன பலன்கள்,அது எப்படி செயல்படுகின்றது என்றெல்லாம் தெரியாமல் இருந்தது.
மக்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் எவ்விதமான பிரதிபலிப்பையும் ஏற்படுத்தாமல் இருந்து வந்தது. இது ஏதோ அரசுக்கும் வீண் வெட்டி செலவு போல எண்ணிய காலங்களும் உண்டு. ஆனால் தற்பொழுது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஐஎஸ் ஆர்ஓ தொடர்ந்து பல்வேறு ஏவுகணைகளை விண்ணில் ஏவி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவது அனைவரின் பார்வையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக சந்திராயன் மூன்று ஏவப்பட்டு அது தரை இறங்கும் ஆகஸ்டு 23 அன்று ஒட்டுமொத்த இந்தியர்களின் கண்களும் அதன் மேல் இருந்தது என்பது வரலாற்று உண்மை.
அதுமட்டுமல்லாமல் அதன் செயல்பாடுகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் அனைத்து தொலைக்காட்சிஊடகங்களிலும் நிமிடம் நிமிடமாக ஒளிபரப்பு செய்தது அனைவருக்கும் அதன் மீது மிகப்பெரிய ஈடுபாடும், அதன் செயல்பாடுகளை உற்றுநோக்கி அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றோம். அதன் சூடு ஆறுவதற்கு முன்பாகவே அடுத்து சூரியனை ஆய்வு செய்வதற்கு ஆதித்யா எல்-1 ஏவப்படுகின்றது என்னும் செய்தியும் அடுத்தடுத்து நமக்கு கிடைக்கின்ற அறிவுபூர்வமான மகிழ்ச்சியாகும். சுமார் 15 லட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டு சூரியனை ஆய்வு செய்யப் போகின்றது என்று என்கின்ற பொழுது அனைவருக்குமே ஒரு பிரமிப்பையும் மிகுந்து வியப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இத்தகையச் சூழலில் இந்தியாவில் உள்ள பள்ளி முதல் கல்லூரி மாணவர்கள் வரை விண்வெளி ஆராய்ச்சியில் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்ள நோக்கமும் வேகமும் விவேகமும் ஏற்பட்டுள்ளது என்றால் மிகையாகாது. அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள் அத்தனை பேருமே ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எதிர்காலத்தில் சிறந்த வல்லுநராக விளங்க வேண்டும் என்னும் எண்ண மேலோட்டம் ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக வருங்காலத்தில் உலகின் குருவாக விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய தேசம் விளங்கும் என்பது உறுதி. ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானிகளுக்கும் அதனை ஒலி, ஒளிபரப்பி மாணவர்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் ஏற்படுத்திய ஊடக தொலைக்காட்சிபத்திரிக்கையினருக்கும் அனைத்து பெற்றோர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி, நன்றி, நன்றி!” என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.