0 0
Read Time:6 Minute, 21 Second

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு மற்றும் அரசு திட்டங்கள் கிடைக்க வேண்டும்! முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை !!

அவர் கூறுகையில்,

“அரசு பள்ளிகளில் கல்வி பயின்றால் மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மருத்துவ படிப்பிற்கு செல்லும் வாய்ப்பு, பொறியியல், விவசாயம் போன்ற கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று அறிவித்தது முதலில் ஏற்புடையதாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது அரசு உதவி பெறும் பள்ளிகள் என்று பாா்ப்போமேயானால் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி மேல்நிலைப் பள்ளிகள் வரை தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 8,328 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழை எளிய நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களே பயின்று வருகிறார்கள் என்பது நிதர்சன உண்மை. பள்ளிகளே இல்லாத அக்காலத்தில் ஆங்கிலேயர்கள் பள்ளிகளை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பெருந்தனவந்தர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் கல்வியை போதிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு துவக்கப்பட்டது தான், பிற்காலத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. அரசு பள்ளிக்கும், அரசு உதவி பெறும் பள்ளிக்கு வருகின்ற 90 சதவிகித மாணவர்கள் சமூக, பொருளாதார சூழலில் பின்தங்கியவர்களாகவே இருப்பதை மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்தால் உணரலாம். இத்தகைய எதார்த்த சூழலை அரசு புரிந்து கொண்டு அரசு பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு கொடுக்கப்படுகின்ற அனைத்து சலுகைகளையும் திட்டங்களையும் நிச்சயமாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதேபோன்று அரசு பள்ளிகளில் தமிழ்வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு 20 சதவீத வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தது, அரசு பள்ளியில் கல்வி பயின்ற மாணவிகளுக்கு மட்டுமே கல்லூரி படிப்பில் மாதம் ஆயிரம் ரூபாய் உயர்கல்வி பயிலும் போது வழங்கப்படும் என அறிவித்ததால் பல்வேறு மாணவ மாணவிகள் திட்டங்களால் பயனடைய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் கூட அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி கிடையாது என்பது ஏற்புடையதல்ல, ஒரே குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் ஒருவர் அரசுப் பள்ளிகளும் மற்றொருவர் அரசு உதவி பெறும் பள்ளியிலும் படித்து வருவதை அடுத்து அவர்களிடமிருந்து பெற்ற பாதிப்புதான் இந்தத் தகவல்.

இத்தகைய பாரபட்சத்தை நீக்க உடனடியாக பரிசீலனை செய்து காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்து கொடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதினால் தான் ஒவ்வொரு மாவட்டத்தின் தேர்ச்சி விகித சதவிகிதம் உயர்ந்து உள்ளது என்பதையும் மறுக்கக்கூடாது. குறிப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 70 சதவிகிதம் முதல் 80 சதவிகிதமாக இருக்கும்.

ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 90 முதல் 100 சதவீதமாக இருக்கும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதங்களை ஒன்றாக கூட்டி தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கல்வி தேர்ச்சி விகிதம் வெளியிடப்படுகிறது. இதில் உண்மையை மறைப்பதற்கு ஒன்றுமில்லை புள்ளிவிவரங்களே அதற்கு சாட்சி. ஆகவே நடுநிலை மற்றும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை அறிவில் சிறந்து மேம்படுத்துகின்ற பணியை செவ்வனே செய்கின்ற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், பயிலும் மாணவர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் சென்று சேரும் சூழலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், கல்வித்துறை அமைச்சரும் தனி கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் நலன் கருதிய கோரிக்கையாகும்”

என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %