காவிரியின் கடைமடை பகுதியாக இருக்கும் காட்டுமன்னார் கோவில் அருகே, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ளது கீழணை. தஞ்சை மாவட்ட பகுதியில் கீழணை அமைந்துள்ளது. கீழணைக்கு கல்லணையில் இருந்து தண்ணீர் வருவதுண்டு.
அணையில் இருந்து வடவாறு வடக்கு, தெற்கு ராஜன் வாய்க்கால்கள், குமிக்கி மண்ணியாறு மேலராமன், கீழராமன், கஞ்சங்கொல்லை வாய்க்கால்கள் என பல்வேறு பாசன வாய்க்கால்கள் மூலம் சுமார் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும், வீராணம் ஏரிக்கும் இங்கு இருந்து தான் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அந்தவகையில் வீராணம் ஏரியின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்களும் பயன்பெறுகின்றன.தற்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம், கல்லணை வழியாக கீழணைக்கு நீர்வரத்து இருந்தது. இதனால் கீழணையின் நீர்மட்டமும் மெல்ல உயர்ந்து வந்தது. மொத்தம் 9 அடி கொள்ளளவு கொண்ட கீழணையில் தற்போது, 8.20 அடி அளவில் தண்ணீர் உள்ளது. நீர் வரத்து இல்லை.
இதேபோல் 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 44.65 அடியில் நீர் இருப்பு உள்ளது. சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 54 கனஅடியும், சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 70 கனஅடியும் நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை. இந்நிலையில் கடைமடை பகுதியில் தற்போது சம்பா சாகுபடி தொடங்கி இருக்கிறது. பெரும்பாலான கிராமங்களில் நேரடி நெல் விதைப்பு பணிகள் முடிந்துள்ளது. இந்நிலையில் சம்பா சாகுபடிக்கு கீழணை மற்றும் வீராணத்தில் இருந்து எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தார்கள். 20-ந்தேதி திறப்பு இதில் வருகிற 20-ந்தேதி(புதன்கிழமை) பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உள்ளார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதனிடையே, தண்ணீர் திறப்பையொட்டி கீழணையின்உள்ள ஷட்டர்கள் மதகுககளில் வர்ணம் பூசி தயார் செய்யும் பணி பொதுப்பணி துறையால் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன், மற்றும் உதவி பொறியாளர் வெற்றிவேல் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.