பழனி மலைக்கோயிலுக்கு அக்டோபர் 1ம்தேதி முதல் செல்போன் மற்றும் கேமரா கொண்டு செல்ல திருக்கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்கள் அவ்வப்போது ஆகம விதியை மீறி பழனி மலைக்கோவில் கருவறையில் உள்ள நவபாஷாண மூலவரை படம்பிடித்து சமூகவலை தளங்களில் பரப்புவது வாடிக்கையாக உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கருவறையை செல்போனில் படம்பிடிக்க முயன்ற பெண் ஒருவரை பாதுகாப்பு ஊழியர் தடுத்து வெளியேற்றியதால், பெண்ணின் தந்தை திருக்கோவில் ஊழியர் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்தினார்.
இந்நிலையில் பழனி கோயிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அக்டோபர் 1ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்க போவதாக மதுரை நீதிமன்ற கிளையில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. அதன் அடிப்படையில் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன்கள், கேமிராக்கள் மற்றும் வீடியோ, புகைப்படங்கள் எடுக்கும் சாதனங்களை கொண்டு வரக்கூடாது என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பக்தர்கள் கொண்டு வரும் செல்போன் மற்றும் வீடியோ புகைப்பட கேமராக்களை, பழனி அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோயில், மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கைபேசி பாதுகாப்பு மையங்களில், செல்போன் ஒன்றுக்கு 5 ரூபாய் கட்டணம் செலுத்தி ஒப்படைத்துவிட்டு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வாங்கிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
எனவே பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் வருகிற அக்டோபர் 1ம்தேதி முதல் செல்போன்கள் கொண்டுசெல்வதை தவிர்க்குமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.