பாஜகவின் 3 நியமன எம்.எல்.ஏக்கள்.. பலம் 9 ஆக உயர்வு- ரங்கசாமி அரசுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து!
30 இடங்களைக் கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான பாஜக 6 இடங்களிலும் வென்றது. திமுக 6 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இந்த முறை புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 6 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். இதனடிப்படையில் புதுச்சேரி சட்டசபையில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக அணிக்கு 16 எம்.எல்.ஏக்களும், திமுக அணிக்கு 8 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். அத்துடன் 6 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இருப்பதால் புதுவை அரசியலில் எதுவும் எந்த நேரத்திலும் நிகழலாம் என்கிற நிலைமைதான்.
இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமிக்கு. கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ரங்கசாமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரங்கசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாஜக அடுத்த அஸ்திரத்தை ஏவி இருக்கிறது.
புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்துள்ளது மத்திய அரசு. இந்த 3 நியமன எம்.எல்.ஏக்களுமே பாஜகவை சேர்ந்தவர்கள். தங்களுக்கு ஒரு நியமன எம்.எல்.ஏ. தேவை என கூட்டணி கட்சியான அதிமுக விடுத்த வேண்டுகோளை பாஜக நிராகரித்துவிட்டது. தற்போது புதுச்சேரி சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் 9 ஆக அதிகரித்துள்ளது.