0 0
Read Time:5 Minute, 29 Second

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது அதிமுக : மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கட்சியை பலப்படுத்துதல், கூட்டணிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அறிஞர் அண்ணா குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணமாலை சில கருத்துக்களை கூறியிருந்தார்.

இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் அண்ணாமலை கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்தனர். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என ஜெயக்குமார் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அதிமுக மூத்த தலைவர்கள் எஸ்.பி.வேலுமணி, சிவி. சண்முகம் உள்ளிட்டோர் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தனர்.

இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எட்ப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:

அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் மற்ற கூட்டணி கட்சியுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்திக்கும். அதிமுக முன்னாள் தலைவர்களை பற்றியும், அறிஞர் அண்ணாவைப் பற்றியும் கடந்த வருடமாக பாஜக அவதூறு பரப்பி வருகிறது என தெரிவித்தார்.

இதனிடையே அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அதிமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அதிமுக மீதும், எங்களுடைய முன்னாள் தலைவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களையும். ஜெயலலிதா அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுனரயில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை’ சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமியை பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர். எடப்பாடி K. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா மற்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %