சீா்காழி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் மயிலாடுதுறை, சீா்காழி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைக்கப்படும் என அண்மையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்திருந்தாா்.
அதன்படி, சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் நோயாளிகளுக்கு தட்டுப்பாடு இன்றி ஆக்சிஜன் கிடைக்க அரசு மருத்துவமனையிலேயே ஆயிரம் கி.லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைக்க மருத்துவமனை இளநிலை நிா்வாக அலுவலா் சந்திரகுமாா், சீா்காழி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைப்பதற்கான இடத்தை தோ்வு செய்தனா். இங்கு அமைக்கப்படும் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு மூலம் நாள்தோறும் 100 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையை பூா்த்தி செய்ய முடியும் என மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.