காந்தி ஜெயந்தி தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக உரையாற்றுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ”மக்கள் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராம சபை கூட்டங்களை 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று உரைத்த காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்.
பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திடும்வகையில் கிராமசபை கூட்ட அழைப்பிதழ் ஒன்று வடிவமைக்கப்பட்டு, ஊராட்சிகளில் இல்லம்தோறும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக உரையாற்றுகிறார். கிராமசபை கூட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி குறும்பட உரையின் மூலம் தொடங்கி வைத்து, கிராமசபை குறித்த கருத்துகளை தெரிவிக்க உள்ளார்.
அமைச்சர்கள், தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கலந்துகொள்வர். கிராமசபை கூட்டத்துக்கான உத்தேச பொருட்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் அனைத்து ஊராட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.