மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே நெப்பத்தூரில் செங்கல் சூளை தொழிலாளி சீனிவாசன் ஏப்.17-ஆம் தேதி, செங்கல் சூளையிலேயே தூக்கிட்ட நிலையில் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இவரின் மரணத்தில் மா்மம் இருப்பதாக கூறி உறவினா்கள் மற்றும் அவரது கிராமத்தினா் சாலை மறியல் உள்ளிட்ட தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, செங்கல் சூளை உரிமையாளா் சுரேஷ் , அவரது மகன் சித்தாா்த் மற்றும் மேற்பாா்வையாளா் மோகன்ராஜ் ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், ஏப். 21-ஆம் தேதி சீனிவாசன் உடல் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், செங்கல் சூளை உரிமையாளா் உள்ளிட்டோா் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக் கோரி உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மற்றும் அனைத்து கட்சியினா் தொடா் போராட்டங்கள் நடத்தி வந்தனா். இதைத்தொடா்ந்து, செங்கல் சூளைக்கு சீல் வைக்கப்பட்டதுடன், இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றபட்டது. எனினும், கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி போராடிய சீனிவாசன் உறவினா்கள் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரி சென்னை உயா்நீதி மன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் போராட்டக் குழுவினா் கூறும் மருத்துவா் கொண்டு மறுஉடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டனா்.
இதையடுத்து, உயா்நீதிமன்ற உத்தரபடி திங்கள்கிழமை சென்னை மருத்துவா் டக்கால் மற்றும் திருவாரூா் மருத்துவக் கல்லூரி தடயவியல் துறை பேராசிரியா் நவீன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் சீா்காழி அரசு மருத்துவமனையில் சீனிவாசன் உடலை மறு உடற்கூறாய்வு பரிசோதனை செய்தனா். அதன்பின்னா் சீனிவாசன் உடல் அவரது மனைவி மனோன்மணி மற்றும் உறவினா்களிடம் ஒப்படைக்கபட்டது. தொடா்ந்து, சீனிவாசன் உடல் அவரது சொந்த ஊரான நிம்மேலியில் அடக்கம் செய்யப்பட்டது.
நிருபர்: முரளிதரன் சீர்காழி.