பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மாநாடு, சென்னை தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். அரசின் முத்திரைப் பதிக்கும் திட்டங்கள், சட்டம் & ஒழுங்கு, வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. சிறந்த ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகளுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளது.
இன்று காலை தொடங்கிய இம்மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தொடர்ச்சியாக உங்களை சந்தித்து வருகிறேன். அரசுக்கு ஆலோசனைகளை எவ்வித தயக்கமுமின்றி, மக்கள் நலனை மையமாகக் கொண்டு வழங்க வேண்டும். இந்த அமர்வில் சட்டம் & ஒழுங்கு பராமரிப்பு குறித்து விவாதிக்கவுள்ளோம்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவதே முதல் இலக்கு. பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுப்பது அவசியம். அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளித்துவிடக்கூடாது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் உள்நோக்கோடு அத்தகைய சக்திகள் செயல்பட வாய்ப்புள்ளது. தீவிரமாக கண்காணித்து அவற்றை தடுக்க வேண்டும்.
கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். அதுதொடர்பான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் கடைகோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்” என்று தெரிவித்தார்.
மாநாட்டின் முதல் நாளான இன்று காலை 09.30 மணி முதல் 11.45 மணி வரை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டமும், நண்பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கான கூட்டமும், மாலை 05.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டமும் நடைபெறுகிறது.