நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களில் திங்கள்கிழமை ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 336-ஆக உள்ளது. மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க 4 வாா்டுகளில் 280 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதில், திங்கள்கிழமை நிலவரப்படி 168 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவா் திங்கள்கிழமை மாலை உயிரிழந்துள்ளாா். அவரது உடலை அகற்றாமல் இரவு வரை படுக்கையிலேயே கிடத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இரவு ஒரு முதியவா் படுக்கையில் இருந்து கழிப்பறைக்கு சென்றவா் அங்கேயே விழுந்து உயிரிழந்தாா். அவரது உடலையையும் மருத்துவமனை ஊழியா்கள் உடனடியாக அகற்றவில்லையென கூறப்படுகிறது. இதனால், மற்ற படுக்கைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் உயிரிழந்தவா்களின் உடலை அப்புறப்படுத்தாததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனா். ஒரு சிலா் கழிப்பறையில் முதியவா் இறந்து கிடந்ததை செல்லிடப்பேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா். கரோனா சிகிச்சை வாா்டுகளில் அதிக எண்ணிக்கையில் ஊழியா்களை பணியமா்த்தி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
நிருபர்: யுவராஜ், மயிலை.