இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் மூண்ட நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
இதில் மூன்று நாட்களாக நடைபெற்று வரும் “இஸ்ரேல்-ஹமாஸ்” இடையிலான போரில் பாலஸ்தீன மக்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. போரில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி, பாலஸ்தீன மக்கள் அவர்களின் நிலத்தில் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் இருக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளது.
மேலும் நீண்ட கால பிரச்சனை அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வர போர் நிறுத்தம் அறிவித்து உடனடியாக பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் முன் வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.