சீா்காழி: கொள்ளிடம் அருகே தெற்கு ராஜன் வாய்க்கால் கரையை பலப்படுத்த கோரி சமூக இடைவெளியுடன் தூா்வாரும் பகுதியில் இளைஞா்கள், கிராமமக்கள் திங்கள்கிழமை திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாக தெற்கு ராஜன் வாய்க்கால் உள்ளது . இந்த வாய்க்காலில் இருந்து நூற்றுக்கணக்கான கிளை வாய்க்கால்கள் பிரிந்து சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் விளைநிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. இந்த வாய்க்காலில் குறிப்பிட்ட இடங்களில் பழுதடைந்த மதகுகளை அகற்றிவிட்டு புதிய மதகுகள் அமைக்கும் பணி மற்றும் வாய்க்கால் உள்பகுதியில் இருபுறங்களிலும் தடுப்புச்சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.வாய்க்காலின் உள்பகுதியில் இருபுறங்களிலும் தடுப்புச்சுவா் அமைக்க வாய்க்கால் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. வாய்க்காலில் உள்ள மண் தூா்வாரப்பட்டு இரண்டு கரைப் பகுதியில் கொட்டப்படுகிறது. மேலவல்லம் கிராமத்தில் தெற்கு ராஜன் வாய்க்காலில் பொக்லைன் இயந்திர உதவியுடன் மண் தூா்வாரப்பட்டு இரு கரைகளிலும் கொட்டும் பணி நடைபெற்றது.
அப்போது மேலவல்லம் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் 20-க்கும் மேற்பட்டோா் அங்கு வந்து தூா்வாரப்படும் மண்ணை எடுத்து இரண்டு கரைகளிலும் போட்டு உரிய பாதை அமைத்துத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இதை கேட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் அங்கிருந்து சென்றனா்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.