கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. காலை மற்றும் மாலை என 2 வேளை வகுப்புகள் நடைபெற்று வரும் இக்கல்லூரியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காலை நேர வகுப்பு முடிந்து 3-ம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை மாணவர் பண்ருட்டி மணப்பாக்கத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(19) உள்பட 8 பேர் ஆட்டோவில் கடலூர் டவுன் நோக்கி சென்றனர்.
உப்பனாறு பாலம் அருகே வந்தபோது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார். டிரைவர் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.மறியல் போராட்டம்இந்த சம்பவத்தை அறிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பலியான மாணவர் குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டார். ஆனால் இந்த நிதி போதாது என்றும், ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நேற்று முன்தினம் கிராம மக்கள் மணப்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஒன்று திரண்டு கல்லூரி வாசலுக்கு வெளியே சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது கல்லூரி நேரத்திற்கு போதிய பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இறந்த மாணவர் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.ஊர்வலம்பின்னர் அவர்கள் அங்கிருந்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், தாசில்தாா் விஜய் ஆனந்த், கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) உதயகுமார் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்களிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும், மாணவர்கள் அதை கேட்காமல், தொடர்ந்து பேரணியாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினா். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் அவர்கள் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தை கடந்து வண்ணாரப்பாளையம் 4 முனை சந்திப்பு அருகில் வந்து சாலையில் அமா்ந்து போராட்டம் நடத்தினர்.வருண் வாகனம்இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு வந்தார். மேலும் போலீசார், சிறப்பு காவல்படை போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் சாலையின் குறுக்கே கயிறு கட்டியும், தடுப்பு கட்டைகள் வைத்தும் மாணவர்கள் தொடர்ந்து செல்லாதபடி தடுத்தனர். இதுதவிர கலவரத்தை கட்டுப்படுத்தும் அதிநவீன வருண் வாகனமும் வரவழைக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது.இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கல்லூரி நேரத்திற்கு போதிய பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். விபத்தில் உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கல்லூரி முன்பு உள்ள ஆட்டோ நிறுத்தத்தை அகற்ற வேண்டும். விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். சாலையில் சுற்றித்திரியும் ஆடுகள், மாடுகள், நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.பரபரப்புஇதை கேட்ட மாவட்ட வருவாய் அலுவலர், ஆட்டோ நிறுத்தத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி நேரத்திற்கு காலை, மதியம் பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும். சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், வேகத்தடை அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
கூடுதல் இழப்பீடு உள்ளிட்ட மற்ற கோரிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதை கேட்ட மாணவர்கள் திருப்தி அடைந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கடலூர் சில்வர் பீச் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தடுக்க கல்லூரி முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.