மயிலாடுதுறை மாவட்டத்தில் சந்திர பாடி முதல் பழையாறு வரை 50 கடலோர கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் தன்மையுடன் காணப்படுகிறது. இதனால் ஆறு மற்றும் வாய்க்கால் பாசனத்தின் மூலம் தான் சாகுபடி நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக காவிரியில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் வாய்க்கால் மற்றும் ஆறுகள் மூலம் பாசன வசதியை சரியான நேரத்தில் இந்த கிராமங்கள் பெற்றன.ஆனால் இந்த ஆண்டு காவிரியில் போதுமான நீர் வராத காரணத்தால், சம்பா சாகுபடி நடைபெறுமா? என அச்சத்தில் விவசாயிகள் இருந்தனர்.
இருந்தபோதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழையை நம்பி தரங்கம்பாடி, மாணிக்கப்பங்கு, வானகிரி, பூம்புகார், நெய்தவாசல், பெருந்தோட்டம், தென்னாம்பட்டினம், திருமுல்லைவாசல் புதுப்பட்டினம், தொடுவாய் உள்ளிட்ட கடலோர கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தனர்.விவாசாயிகள் மகிழ்ச்சி இதனிடையே கடந்த சில நாட்களாக தரங்கம்பாடி மற்றும் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்ததன் காரணமாக நேரடி நெல் விதைப்பு செய்த வயலில் நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி திருவாளி திருமாறன் கூறுகையில் கடலோர கிராமங்களில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா? என அச்சம் விவசாயிகளிடையே காணப்பட்டது. ஆனாலும் மனம் தளராமல் விவசாயிகள் ஆடுதுறை 38, கோ 50, திருச்சி 3, பொன்னி உள்ளிட்ட குறுகிய கால ரகங்களை நேரடி நெல் விதைப்பு செய்தனர்.
கடந்த சில நாட்களாக திடீரென பெய்து வரும் மழையின் காரணமாக தற்போது நெல் மணிகள் முளைக்க தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகளிடையே சம்பா சாகுபடி நன்றாக இருக்கும் என நம்பிக்கை பிறந்துள்ளது. இதுவரை கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன்கள் வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக விவசாய கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.