தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியானது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்த லியோ திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகும் ‘லியோ’ திரைப்படம், தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்டுள்ளது.
தமிழ்நாட்டில் லியோ படத்தின் முதல் காட்சியை அதிகாலை 4 மணிக்கு வெளியிட அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை. மாறாக காலை 9 மணிக்கே முதல் காட்சியை திரையிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
பின்னர் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி படக்குழு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தங்களால் உத்தரவிட முடியாது என்றும், சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிக்கக் கோரி அரசுடன் படக்குழு ஆலோசனை மேற்கொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டது போன்று, காலை 9 மணிக்கே முதல் காட்சியை திரையிட வேண்டும் என்று உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு லியோ திரைப்படம் வெளியாக உள்ளது.
அதேநேரம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்திருந்தன. அந்த வகையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கு லியோ திரைப்படம் வெளியானது. ஆந்திராவில் அதிகாலை 5 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு படையெடுத்துச் சென்றனர்.
தியேட்டர் வளாகங்கள் முழுக்க பேனர்கள், கட் அவுட்கள், போஸ்டர்கள், தோரணங்கள் என விஜய் ரசிகர்கள் அமர்க்களப்படுத்தினர். லியோ படம் வெளியாவதை முன்னிட்டு தியேட்டர்களில் விடிய விடிய கொண்டாட்டங்கள் களைகட்டியது.