ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் எனவும் கடந்த காலங்களில் இருந்தது போன்று அதிகபட்ச வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர் பணி வழங்க பயிற்சி பெற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அண்மையில் சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திலும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனிடையே ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்குப் பிறகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட அறிவிப்பில், ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில், ஆசிரியர் பணியில் சேர பொதுப்பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 53-ஆகவும். இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 58-ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.