என் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை என வருமான வரித்துறை சோதனைக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டிளித்துள்ளார்.
வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்ற பின்பு திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் இந்த ஐந்து நாட்கள் கற்பனையான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன . என் வீட்டில் என் மனைவி வீட்டில் என் மகன்கள் வீட்டில் ஒரு ரூபாய் கூட வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்யவில்லை. அபிராமி தியேட்டர் உரிமையாளர் யார் என்று எனக்கு தெரியாது.
தமிழகத்தில் பாஜகவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனைக்கு போவது இல்லை. இந்த சோதனையால், என்னுடைய திமுக பணி, என்னுடைய அமைச்சர் பணி ஐந்து நாட்களாக முடங்கியது. வருமான வரித்துறை பாஜகவின் ஐடி விங்காக மாறிப்போயுள்ளது.
இந்த ஐடி சோதனைக்கு எல்லாம் அஞ்சியவர்கள் நாங்கள் கிடையாது. சரஸ்வதி அம்மாள் அறக்கட்டளைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என் பெயரில் 48 ஏக்கர் 33 சென்ட் நிலம், காந்திநகரில் ஒரு வீடு மட்டும் தான் உள்ளது. நான் தொடர்ந்து வருமான வரித்துறைக்கு வரி செலுத்தி தான் வருகிறேன். நான் ஏமாற்றுபவன் அல்ல.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.