சென்னையின் முதல் ‘யு’ வடிவ மேம்பாலத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னை ஓ.எம்.ஆர் சாலை, இந்திரா நகர் சந்திப்பில் உள்ள ‘யு’ வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க அரசு சார்பாக மேம்பாலங்களை அமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை ஓ.எம்.ஆர் ராஜிவ் காந்தி சாலை மற்றும் இ.சி.ஆர் சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பு மற்றும் இந்திரா நகர் சிக்னல் சந்திப்பை கடக்க காலை மற்றும் மாலை நேரங்களில் பீக் ஹவரில் 30 முதல் 40 நிமிடங்களுக்கு மேலாவதாகவும், இதற்கு அரசு தீர்வுகான வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கொண்ட குழுவினர் டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்ட பரிந்துரை செய்தனர். அந்த பகுதியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து உள் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.108.13 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி ராஜிவ் காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க டைடல்
பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே 18.15 கோடி ரூபாய் செலவில் ‘யு’வடிவ மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சென்னையின் முதல் ‘யு’ வடிவ பாலம் 237 மீட்டர் நீளமும், 7.50 மீட்டர் ஓடுதள அகலமும் கொண்ட இரண்டு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேம்பாலத்தின் இரு புறத்திலும் தலா 120 மீட்டர் நீளத்திறகு அணுகு சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.