0 0
Read Time:4 Minute, 8 Second

“நான் பேசியதற்கு த்ரிஷா மனம் வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்” என்று சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.

நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு நடிகை த்ரிஷா சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பாகியது.

இதையடுத்து, நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாக நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு மற்றும் நடிகை, நடிகர்கள் சமூக வலைதளங்களில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராகவும், நடிகை திரிஷாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது.

இதனைத்தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் IPC 509 – பெண்ணின் நாகரிகத்தை அவமதிக்கும் செயல் செய்தல், IPC 354(A) – பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

உடல் நிலை பாதிப்பால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் போலீசாருக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில், இன்று மதியம் 2.30 மணியளவில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அங்கு, அவரிடம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை மேற்கொண்டார்.

அப்போது, மன்சூர் அலிகான் கைப்பட எழுதிக் கொடுத்து விளக்கம் அளித்தார்:

அந்த வீடியோவில் பேசியது நான் தான். நான் ஜாலியாக பேட்டி கொடுத்தேன். த்ரிஷா அதனை தவறாக புரிந்து கொண்டார். எந்த உள் அர்த்தமும் வைத்து, நான் அப்படி பேசவில்லை. நான் பேசியதற்கு த்ரிஷா மனம் வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன். எனது குரல் பிரச்சனைக்காக நாளை தான் வருவதாக இருந்தேன். ஆனால், சமூக வலைதளங்களில் நான் தலைமறைவாக இருப்பதாக தவறாக வதந்தி பரவியதால் தற்போது ஆஜர் ஆனேன். இந்த வழக்கு விசாரணைக்காக எப்போது அழைத்தாலும் நான் வர தயாராக உள்ளேன்.

இவ்வாறு போலீஸ் விசாரணையின் போது மன்சூர் அலிகான் கைப்பட எழுதி கொடுத்தார்.

இதனை அடுத்து காவல் நிலையத்தை விட்டு வெளியில் வந்த மன்சூர் அலிகான், இனி செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் என கூறி விட்டு புறப்பட்டுச் சென்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %