‘சேரி மொழி’ என்ற வார்த்தை சர்ச்சையாகி வரும் நிலையில், மன்னிப்பு கேட்க முடியாது என குஷ்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது சூறாவளியை கிளப்பியது. இந்த பேச்சிற்காக மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரினார். திரிஷாவும், மன்சூர் அலிகானை மன்னித்து விட்டதாக எக்ஸ் பதிவில் குறிப்பிட்டார். திரிஷா மன்னித்தாலும் காவல்துறையினர் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதுஒருபுறமிருக்க திரிஷா விவகாரத்தில், மன்சூர் அலிகானை கண்டித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பை ‘சேரி லாங்கேஷ்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார்.
திரிஷா – மன்சூர் அலிகான் விவகாரம் ஒருபுறம் தீப்பற்றி எரிய, சேரி மொழி என குஷ்பு கூறியது மற்றொருபுறம் கொழுந்துவிட்டு எரிந்துவருகிறது. குஷ்பு மீது நடவடிக்கை கோரி விசிக தரைப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தாழ்த்தப்பட்ட மக்களை குறை கூறி சேரி என்ற வார்த்தையை தான் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார். வேளச்சேரி என்ற பெயரில்கூட சேரி உள்ளதாக தெரிவித்த குஷ்பு, யாரையும் குறிப்பிட்டு பேசாதபோது நான் ஏன் மன்னிப்பு தெரிவிக்க வேண்டுமெனவும் வினவினார்.
பிரெஞ்ச் மொழியிலேயே சேரி என்ற வார்த்தையை சொன்னதாகவும், “நான் தப்பா பேசல… அதனால வருத்தம் தெரிவிக்க மாட்டேன்” என்றும் திட்டவட்டமாக தெரிவித்த குஷ்பு, தன் வீட்டின் முன் போராட்டம் நடத்தப் போவதாக சிலர் சொன்னதாகவும், தான் காத்திருந்தும் யாரும் வரவில்லை என்றும் கூறினார்.
மணிப்பூர் விவகாரத்தில் தான் எதுவும் பேசவில்லை என்பது தவறு எனக்கூறிய குஷ்பு, தவறிழைத்தோருக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டுமென்று தான் கருத்து சொன்றனதாகவும் தெரிவித்தார். சிலர் வழக்கு போடுவோம் என மிரட்டுவதாக தெரிவித்த குஷ்பு, நான் பார்க்காத வழக்குகளா? என்றும் பதில் அளித்தார்.