கடலூர்:வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில்தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (27 ந்தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 29- ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, வேப்பூர், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, திட்டக்குடி, விருத்தாச்சலம், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது நேற்று இரவு இடி மின்னலுடன் பெய்த வந்த நிலையில் கனமழையாக மாறியது.
இதனை தொடர்ந்து விடிய விடிய மழை தொடர்ந்து வந்த நிலையில் சேத்தியாத்தோப்பு பகுதியில் 17 சென்டி மீட்டர், லால்பேட்டை பகுதியில் 11 சென்டி மீட்டர், கொத்தவாச்சாரி 10.9 சென்டிமீட்டர், ஸ்ரீமுஷ்ணத்தில் 10.7 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வந்துள்ளதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதோடு குடியிருப்பு பகுதிகளிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்பட்டு வருகின்றது. மேலும் சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழை பெய்த காரணத்தினால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகின்றது. இந்த மழை தொடரும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருப்பதோடு தண்ணீர் சூழ்ந்தால் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
கடலூர் மாவட்டத்தில் மில்லி மீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு- சேத்தியாதோப்பு – 168.4,லால்பேட்டை – 110.0,கொத்தவாச்சேரி – 109.0, ஸ்ரீமுஷ்ணம், – 107.1,புவனகிரி – 88.0, காட்டுமன்னார்கோவில் – 87.0, வேப்பூர் – 85.0,கலெக்டர் அலுவலகம் – 77.4, பரங்கிப்பேட்டை – 76.8, பெல்லாந்துறை – 74.5,கடலூர் – 69.5, குறிஞ்சிப்பாடி – 66.0,கீழ்செருவாய் – 64.0, சிதம்பரம் – 63.1,வடக்குத்து – 63.0, அண்ணாமலைநகர் – 58.0,தொழுதூர் – 58.0, லக்கூர் – 52.3, விருத்தா சலம் – 50.2,குப்பநத்தம் – 46.4, காட்டுமயிலூர் – 45.0,எஸ்.ஆர்.சி.குடிதாங்கி – 40.0, மீ-மாத்தூர் – 38.0, வானமாதேவி – 30.6, பண்ருட்டி – 16.௦ மாவட்டத்தில் மொத்தம் 1,743.30 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.