கடலூர்: புவனகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் முத்துகிருஷ்ணாபுரம், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
இங்கு பாசன வடிகாலாக நண்டு ஓடை வாய்க்கால் இருந்து வருகிறது. இந்த வடிகால் வாய்க்கால் சரிவர தூர்வாரததால் தற்போது பெய்த மழையால் நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்தது.
இதனால் கடந்த 2 நாட்களாக தண்ணீர் வடியாததால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால் முழுவதிலும் கோரைப்புல், ஆகாயத்தாமரை பரவியிருப்பதால் விளை நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற வழியில்லாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்து தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.