மயிலாடுதுறை மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய பைக்கை திருடிச் சென்று வழக்குப்பதிவு செய்ய முடியாமல் திணற வைத்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் புஞ்சை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் திவாஸ், ரகுமான். இவர்கள் இருவரும் தீபாவளியன்று பூம்புகார் கடற்கரைக்கு சென்றுள்ளனர். பின் அங்கிருந்து ஸ்ப்ளன்டர் பிளஸ் பைக்கில் இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கருவி முக்கூட்டு என்ற பகுதி வழியாக வந்து கொண்டிருந்த போது, இவர்கள் வந்த இருசக்கரவாகனம் மீது அடையாளம் தெரியாத கார் பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருவரும் படுகாயம் அடைந்தனர்.
திவாஸ் மயிலாடுதுறையில் தனியார் மருத்துவமனையிலும், ரகுமான் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற செம்பனார்கோவில் போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரினை சிசிடிவி பதிவுகளைக் கொண்டு தேடினர்.
விபத்தில் சிக்கிய ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு விபத்தில் சேதமடைந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்பிளன்டர் பைக் காணாமல் போயிருந்தது. ஏற்கனவே விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய போலீசார், விபத்தில் சிக்கிய பைக்கும் காணாமல் போனதால், எப்படி வழக்குப்பதிவு செய்வது என்பது புரியாமல் குழம்பிப் போயினர்.
இதையடுத்து, மீண்டும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, பைக்கை ஒரு கும்பல் திருடிச் செல்வது தெரியவந்தது. விபத்தில் சேதமடைந்த பைக்கினை அன்று மாலை 5 மணியளவில் 3 இளைஞர்கள் டோ செய்து எடுத்துச் சென்றது அதில் பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி பதிவுகளை வைத்து கடந்த 10 நாட்களாக செம்பனார் கோவில் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.