மூன்று மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் அளவுக்கதிகமான ஆதரவளித்த மூன்று மாநில மக்களுக்கும் எனது நன்றி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் முடிவுகளை நாடே ஆவலுடன் எதிர்பார்த்தது.
இந்த நிலையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கையில் மூன்று மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி X தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது:
“மூன்று மாநில தேர்தல் முடிவுகள் பாஜக அரசு வழங்கும் நல்லாட்சியிலும், வளர்ச்சியிலும் இந்திய மக்கள் துணை நிற்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அளவுக்கதிகமான ஆதரவளித்த மூன்று மாநில மக்களுக்கும் எனது நன்றிகள், அவர்களின் நலனுக்காக அயராது உழைப்போம். இடைவிடாமல் உழைத்து பாஜக செய்த வளர்ச்சிகளையும், கருத்தியல்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்த தொண்டர்களுக்கும் நன்றி” இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.