மயிலாடுதுறை மாவட்டத்தில் வாழை. மா, கொய்யா, பலா மற்றும் எலும்மிச்சை போன்ற பழ வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மயிலாடுதுறை வட்டாரத்தில் கிழாய் வருவாய் கிராமத்தை அடுத்த புத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த திரு.ரா.பாண்டியன் த/பெ ராமசாமி என்ற விவசாயி தனது தோட்டத்தில் புதிய யுக்தியாக 40 சென்ட் நிலத்தில் மானாவாரி பயிரான அத்திப்பழச் சாகுபடி செய்து வருகிறார்.
அத்தியில், நாட்டு அத்தி, டிம்லா அத்தி, ஆப்கான் அத்தி, இஸ்ரேல் அத்தி, பூனா அத்தி என பல ரகங்கள் உள்ளன. இது அனைத்து வகை மண்ணிலும் வளரும். குறுமணல் கலந்த களிமண் நிலம் மிகவும் ஏற்றது. ஓரளவு வறட்சியைத் தாங்கும். 45 முதல் 50 நாட்களான கன்றுகள் நடவுக்கு ஏற்றது. வரிசைக்கு வரிசை 12 அடி மற்றும் செடிக்குச்செடி 10 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
விவசாயி திரு.ரா.பாண்டியன், கூறுகையில் பூனா சிகப்பு அத்தி வகையை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருவதாகவும், பழங்களாக உள்ளுர் சந்தையில் விற்பனை செய்வதாகவும் மேலும் மற்ற ரகங்களை காட்டிலும் சற்று பெரியதாக இருப்பதாலும், பழங்கள் பார்ப்பதற்கு மினுமினுப்புடன் இருப்பதாலும் வணிக ரீதியாக விற்பனைக்கு ஏற்றதாக உள்ளது என்று கூறினார். மேலும் பராமரிப்பு செலவு குறைவாக உள்ளதாகவும் தனது தின வருமானம் கூடியிருப்பதாகவும் கூறினார்.
இவர்தம் வயலை மயிலாடுதுறை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் திருமதி.ச.பொன்னி, உடன் வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பார்வையிட்டு தொழில் நுட்ப அறிவுரைகளை வழங்கினர். மேலும் இவ்வகையான மாற்றுப்பயிர் பழச்சாகுப்படிக்கு விவசாயிகள் முன்வர வேண்டும் என தோட்டக்கலை உதவி இயக்குநர் அழைப்பு விடுத்தார்.