காசா: காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான் வழிதாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 33 பேர் பலியாயினர். புனித ரம்ஜான் மாதத்தையொட்டி, ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்சா மசூதியில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை பல்வேறு கட்டுப்பாடு விதித்தது. இதனால், இஸ்ரேல் படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் நேற்று முன்தினம் நடந்த மோதலில் சுமார் 500 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல் படையினர் அல் அக்சா மசூதியை விட்டு வெளியேற காசா போர்முனையில் போராடும் ஹமாஸ் தீவிரவாதிகள் கெடு விதித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நோக்கி ஜெருசலேம் அருகே ராக்கெட் குண்டு வீசினர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகளின் முகாம்களை நோக்கி காசாவில் வான்வழி தாக்குதல் நடத்துகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 33 பேர் பலியாகினர். அதில் 15 பேர் தீவிரவாதிகள் என இஸ்ரேல் கூறி உள்ளது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகள் உள்ள பெரிய குடியுருப்பு கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் குண்டு மழை பொழிகிறது. இதில் பொதுமக்களும் பலியாகி வருகின்றனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த செவியலியர் சவுமியா உட்பட ஏராளமானோர் உயிரிழந்ததற்கு இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஜெருசலேமில் நடைபெற்று வந்த வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வந்து அங்கு இயல்பு நிலை திரும்பப் வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.தாக்குதலில் உயிரிழந்த இந்திய பெண் சவுமியா சந்தோஷ் குடும்பத்தினருக்கு வி. முரளிதரன் இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சவுமியா சந்தோஷ் குடும்பத்தினருக்கு தேவையான் அனைத்து உதவிகளையும் வழங்க வெளியுறவுத் துறை தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.