மயிலாடுதுறை, டிசம்பர்- 12:
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ஜனவரி 30-ம் தேதி முதல் 03.02.2023 வரையிலான காலத்தில் நெல் அறுவடை பருவத்திலும், உளுந்து விதைத்து வளர்ச்சி பருவத்திலும் இருந்த நிலையில் பருவம் தவறி பெய்த மழையினால் அறுவடை பருவத்தில் இருந்த நெல் பயிர்களும், வளர்ச்சி பருவத்தில் இருந்த உளுந்து பயிர்களும் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு மிகப்பெரிய மகசூல் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின்பேரில், மாவட்ட ஆட்சியரின் சீரிய முயற்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கணக்கெடுத்து 5 வட்டார விவசாயிகளுக்கும் நெல்லுக்கு 1 ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் வீதமும், உளுந்துக்கு 1 ஹெக்டருக்கு ரூ.3 ஆயிரம் வீதமும், விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டது. அதன்படி, மாநில பேரிடர் நிதியிலிருந்து முதல் தவணையாக 15,914 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ரூ.6 கோடியே 64 இலட்சமும், இரண்டாம் தவணையாக 19,655 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ரூ.5 கோடியே 86 இலட்சமும் வழங்கப்பட்டது.
இந்நிவாரணத் தொகையை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விடுபடாமல் நிவாரணத்தொகையை பெற்று தந்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் காவிரி டெல்டா பாசனதாரர் சங்கத்தின் சார்பாக கோபி கணேசன் அவர்கள் தலைமையில் திரளான விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் ஏபி மகாபாரதியை நேரில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி விவசாய சங்கத்தின் சார்பில் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் பேசுகையில், இந்நிவாரணத் தொகையை பெற்று தந்த பணியானது, ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. எனவே, இப்பணியை திறம்பட செய்த வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 வட்டார விவசாயிகளுக்கும் 2 தவணையாக நிவாரணத்தொகையை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், வேளாண்மைத்துறை அமைச்சர்களுக்கும் விவசாயிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார், காவிரி டெல்டா பாசனதாரர் சங்கத்தின் சார்பில் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்திற்கான ரொக்கத்தினை மாவட்ட ஆட்சியர்களிடம் கோபி.கணேசன் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் ஐ.கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் பானுகோபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயபாலன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்