0 0
Read Time:5 Minute, 57 Second

பட்டப்பெயர் வைத்து தன்னை அழைக்க வேண்டாம் என்று திமுகவினரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம் சட்டமன்றத் தொகுதி பாகநிலை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா ராஜன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது :

“சேலம் மாநாட்டில் 7 லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். எழுச்சி மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்திக் காட்டியிருக்கிறோம். தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்று தெரியும். நான் கேட்பது அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது தான். அனைத்து தொகுதிகளும் நாம் முழுமையாக வெற்றி பெறுவோம்.

பட்டப்பெயர் வைத்து என்னை கூப்பிடுவது எனக்கு பிடிக்கவில்லை. நான் சின்னவர் தான், உங்களை விட வயதில் சின்னவர். வாழும் பெரியார், இளைய கலைஞர் என்று கூப்பிடுகிறீர்கள். ஆனால் நான் உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருக்கத்தான் ஆசைப்படுகிறேன். அதுதான் நிரந்தரம், தயவு செய்து பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

கடுமையான நிதி நெருக்கடி இருக்கும்போது ஆட்சிக்கு வந்தோம். முதலமைச்சர் முதன்முதலில் போட்ட கையெழுத்து பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம். இதன்மூலம் பெண்கள் மாதத்திற்கு ரூ.900 வரை சேமிக்கிறார்கள். வருடத்திற்கு ரூ.12,000 சேமிக்கிறார்கள்.

குழந்தைகளை பார்த்துக்கொள்ள முதலமைச்சர் இருக்கிறார் என்று, பல பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை வாழ்த்தி அனுப்புகிறார்கள். சிறுசிறு குறைகள் இருக்கும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். சிலருக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லை என்று சொன்னார்கள். உங்களது பகுதியில் அதற்கான பட்டியலை தயார் செய்து மாவட்டச் செயலாளரிடம் வழங்கிவிடுங்கள். அதைச் சரி செய்வதற்கான முழு பணியில் நான் இறங்குகிறேன். 90% மக்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் சென்று விட்டது.

பாஜகவின் உருட்டல் மிரட்டலுக்கு பயப்பட திமுக ஒன்னும் அடிமை கூட்டம் கிடையாது. நாடாளுமன்றத் தேர்தலில் 40/ 40 வெற்றி பெற்று, தலைவரிடம் கொடுத்து விட்டால் மத்திய அரசிடம் தெம்பாக சென்று தமிழகத்திற்கு தேவையானதை கேட்டு வாங்கலாம். மத்திய அரசு 1 கிலோமீட்டர் தூரம் ரோடு போடுவதற்கு, ரூ.250 கோடி கணக்கு காட்டி உள்ளார்கள். இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் கணக்கு காட்டி உள்ளார்கள்.

நிதி அமைச்சரிடம் காசு கேட்டேன். உங்க அப்பா வீட்டுக் காசையா கேட்டேன். மக்கள் வரிப்பணத்தை கேட்டேன் என்று கூறினேன். உடனே அவர், அமைச்சர் உதயநிதி மரியாதையாக பேச வேண்டும் என்று டெல்லியில் மீட்டிங் வைத்தார். அவர் கேட்ட மரியாதை நான் கொடுத்துவிட்டேன். ஆனால் நான் கேட்ட நிதி இன்னும் தரவில்லை.

திமுக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. எங்களுக்கு ஒன்றே குலம் ஒருவனே தேவன். மன்னிப்பு கேட்க முடியாது. நான் கலைஞரின் பேரன். வருவதை பார்த்துக் கொள்ளலாம். நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம். ஜாதி, மதம் கிடையாது, அனைவரும் சமம் என்று தான் நான் பேசினேன்.
ஓபிஎஸ் சொல்கிறார் இபிஎஸ் கைது செய்யப்படுவார் என்று. இபிஎஸ் சொல்கிறார் ஓபிஎஸ்தான் முதலில் கைதாவார் என்று. நான் சொல்கிறேன் இருவரும் ஒன்றாக தான் கைதாக போகிறார்கள். அப்போதாவது சிறைச்சாலைக்கு தவழ்ந்து தவழ்ந்து செல்லாமல் செல்லுங்கள். 2021-ல் அடிமைகளை துரத்தி வீட்டுக்கு அனுப்பினோம். 2024-ல் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிக்க வேண்டும்”

இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %