ஒரு கிலோ பூண்டு ரூ.400 முதல் 700 வரை விற்பனை செய்யப்படுவதால், விலையேற்றத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று பூண்டு. மருத்துவ குணம் வாய்ந்த இந்த பூண்டு சமையலுக்கு உகந்த பொருளாக திகழ்ந்து வருகிறது. சைவம், அசைவம் என இரண்டிலுமே பூண்டின் தேவை காலத்திற்கும் மாறாதது. தமிழ்நாட்டில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பயிரிடப்பட்டாலும், மாநிலத்தின் பெரும்பான்மையான தேவையை ஈடுசெய்வதற்கு, மற்ற மாநிலங்களில் இருந்தே பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்தும் பூண்டு, பெரும்பாலும் மத்தியப் பிரதேசம், குஜராத்,
ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஆண்டுதோறும்
ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை
செய்யப்படும். பொங்கலுக்குப் பின்னர் வடமாநிலங்களில் இருந்து பூண்டு
மூட்டைகள் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
அண்மைக் காலமாக பூண்டின் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலையும் கடும் உயர்வை சந்தித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள பூண்டு விற்பனை அங்காடி மற்றும் காய்கறி கடைகளில் 1 கிலோ பூண்டு ரூ. 400 முதல் 700 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பூண்டின் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்யார் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.