கடலூர்: கடலூரில் வருவாய்த்துறை அலுவலர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இதனால், கடலூர் மாவட்டம் முழுவதும் வருவாய் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளுக்காக மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதற்கான அறிவிப்பு வெளியானது.
அதன்பபடி வருவாய்த்துறை அலுவலர்களின் பணியிறக்கம், பெயர் மாற்றம் விதி திருத்தம் மற்றும் அலுவலக உதவியாளர் காலிபணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடந்து வருகின்றது.
இந்த போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில், கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட 10 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் முதற்கட்ட போராட்டமான ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.