விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லி சலோ’ பேரணியைத் தொடங்கினர். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவாரத்தை தோல்வி அடைந்ததை அடுத்து, சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளனர். இந்த போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் விவசாயிகள் போராட்டம் அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது. எப்படியாவது விவசாயிகள் போராட்டத்தை தடுக்க வேண்டும் என மத்திய அரசு, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று விவசாயிகள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்தது.