மயிலாடுதுறை: கொரோனாவால் இறந்தவர்களின் உடலை பலமணிநேரம் வார்டிலேயே வைத்திருப்பதால் அச்சம்! – சமூக ஆர்வலர்கள் வேதனை
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலுள்ள கொரோனா வார்டில் இறந்த நோயாளிகளின் உடலை உடனடியாக அப்புறப்படுத்தாமல் பலமணிநேரம் வார்டிலேயே வைத்திருப்பதால் சிகிச்சைபெறும் மற்ற நோயாளிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இறந்துபோகும் கொரோனா நோயாளிகளின் உடலை அப்புறப்படுத்த பலமணிநேரம் காலதாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
மயிலாடுதுறை மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4 வார்டுகளில் 280 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், 168 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று கழிவறைக்கு சென்ற நோயாளி ஒருவர் கழிவறையிலேயே இறந்துள்ளார். அவரது உடலை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோல் வார்டில் இறந்துபோன கொரோனா நோயாளி ஒருவரின் உடலை அப்புறப்படுத்தாமல் பலமணிநேரம் இறந்தவர் உடல் படுக்கையிலேயே இருந்ததாகவும் நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், மற்ற படுக்கைகளில் சிகிச்சை பெற்றுவரும் வயது முதிர்ந்த நோயாளிகள், இறந்துபோன கொரோனா நோயாளிகளின் உடலை பார்த்து அச்சமடைந்துள்ளதாகவும் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறும் நோயாளிகளில் உறவினர்கள், கழிவறையில் முதியவர் இறந்து கிடந்ததை செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். “எனவே கொரோனா சிகிச்சை வார்டுகளில் அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை பணியில் அமர்த்தி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.