மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி விஜயதரணி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் விஜயதரணி இணைந்துள்ளார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மோசமான அனுபவத்தால் பாஜகவில் இணைந்துள்ளேன் என விஜயதரணி தெரிவித்துள்ளார். பாஜகவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் விஜயதரனி தெரிவித்துள்ளார்.