அதிமுக மற்றும் பாமக கட்சிகளுக்கிடையேயான தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேசியளவில் பாஜக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையேயான போட்டியில், திமுக கூட்டணியை உறுதி செய்து தொகுதிப் பங்கீடு வரை சென்றுவிட்டது. முதற்கட்ட பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டது.
ஆனால், அதிமுகவில் இன்னும் கூட்டணி எதுவும் உறுதியாகவில்லை. தேர்தல் குறித்த அறிவிப்பு வந்த பிறகே கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அதிமுக தொடர்ந்து கூறி வருகிறது. அதேநேரம் கூட்டணியை இறுதி செய்ய பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அதிமுக மற்றும் பாமக கட்சிக்கிடையே தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என உடன்பாடு எட்டியதாக கூறப்படுகிறது. இன்று (பிப். 24) அல்லது நாளை (பிப். 25) மாலைக்குள் கூட்டணி இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது
ஜெயலலிதா பிறந்தநாளை முடித்துக் கொண்டு சேலம் செல்ல திட்டமிட்டு இருந்த எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாகவும், இதேபோல தேமுதிகவுக்கு 3 நாடாளுமன்ற தொகுதிகளை ஒதுக்க அதிமுக இசைவு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.