0 0
Read Time:21 Minute, 5 Second

இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமுகமான முறையில் நடந்து வருகிறது. தேர்தல் களத்தில் ஒரு சில சவால்கள் எல்லாத் தரப்புக்கும் இருக்கும். ஆனால் மக்கள் மனங்களை வெல்வதில் இந்தியா கூட்டணிக்கு எந்தச் சவாலும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ‘அவுட்லுக்’ (மார்ச் 2024) ஆங்கில இதழில் சார்பாக நேர்காணல் பெறப்பட்டது. அதன் தமிழாக்கம் பின்வருமாறு:

கேள்வி: 2021-ஆம் ஆண்டு நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது சந்தித்த பெரிய சவால்கள் என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்: கோவிட் இரண்டாவது பேரலை என்ற மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்றது. மக்களின் உயிரைக் காக்க வேண்டிய மிகச் சவாலான பணி எங்கள் முன் இருந்தது. ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்தையும் ஒருவார காலத்திற்குள் சமாளித்து, மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டோம்.

ஆனாலும், முந்தைய ஆட்சியாளர்களின் மோசமான நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் ஊழல் முறைகேடுகளால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், அரசின் நிதி நிலைமையும் படுபாதாளத்திற்குப் போயிருந்தது.

மாநில உரிமைகளைப் பறிக்கின்ற ஒன்றிய அரசுக்கு அடிபணிந்தவர்களாக அ.தி.மு.க ஆட்சியாளர்கள் இருந்ததால், தமிழ்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பே சீரழிந்திருந்தது. இந்த நிலைமைகளை மாற்றி, தமிழ்நாட்டை மீண்டும் முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்கிற எங்கள் லட்சியமும் இலக்கும் சவால்களுடனேயேதான் தொடங்கின. அந்தச் சவால்களை எதிர்கொண்டு இன்று பல சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.

கேள்வி: பல்வேறு புள்ளிவிவரங்கள், தரவரிசைப் பட்டியல்களின் அடிப்படையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாட்டின் நிலை என்ன? இந்த மூன்றாண்டுகளில் கண்கூடாக உங்கள் அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்: கல்வி, மருத்துவம், அடிப்படைக் கட்டமைப்பு, பொருளாதாரம் இந்த நான்கும்தான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை அளவிடுவதற்கான அம்சங்கள்.

பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இல்லம் தேடிக் கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவற்றால் பள்ளிக்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையும், உயர்கல்விக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போதைய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆண் மாணவர்களுக்கான ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டமும் நல்ல பலனைத் தரும் என்று உறுதியாகச் சொல்லலாம். உயர்கல்விக்கான கட்டமைப்பில் தமிழ்நாடு எந்தளவுக்குச் சிறந்து விளங்குகிறது என்பதை அகில இந்திய அளவிலான தரவரிசைப் பட்டியலே நிரூபிக்கும். இந்தியாவின் முதல் நூறு உயர்கல்வி நிறுவனங்களில் அதிக இடங்களைத் தமிழ்நாடு பெற்றுள்ளது.

மருத்துவக் கட்டமைப்பில் ‘இந்தியாவின் மருத்துவத் தலைநகர்’ என்ற பெருமையைத் தமிழ்நாடு பெற்றுள்ளது. மக்களுக்கான மருத்துவச் சேவையில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்கள் மனித உயிர்களின் மகத்துவத்தை உணர்த்தக்கூடியனவாக உள்ளன.

தொழில் வளர்ச்சியில் கடந்த 3 ஆண்டுகளில் பல கட்டங்கள் முன்னேறி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலம் என்ற நிலைக்குத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 2023 நிதியாண்டில் முதலிடத்துக்குத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. தொழில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு எங்கள் ஆட்சிக்காலத்தில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. புதிய முதலீடுகள், புதிய தொழிலகங்கள், வேலைவாய்ப்புகள் என பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம். இந்தியாவில் மொத்தமாகப் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மட்டும் 40 விழுக்காடாக உள்ளது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை நோக்கிய பொருளாதார வளர்ச்சியை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான சமச்சீரான வளர்ச்சியாகவும், பாலினச் சமத்துவம் கொண்ட வளர்ச்சியாகவும் கட்டமைத்து வருகிறோம்.

குனிந்து தேட வேண்டிய அளவில் இருந்த தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை மூன்றாண்டுகளில் நிமிர்ந்து பார்க்க வேண்டிய அளவுக்கு உயர்த்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு.

கேள்வி: குஜராத் மாடலில் இருந்து திராவிட மாடல் எப்படி வேறுபட்டது என விளக்க முடியுமா? இந்த மாடல் உங்கள் வளர்ச்சிப் பாதையில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்துகிறது?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்: திராவிட மாடல் என்பது வேறெந்த மாடலுடன் ஒப்பிட இயலாத தனித்துவமான முன்மாதிரியாகும். இதன் தொடக்கம் என்பது நூறாண்டுகளுக்கு முன்பே நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் அடித்தளமிடப்பட்டது. வகுப்புவாரி இடஒதுக்கீடு, அனைத்துச் சமுதாயத்தினருக்குமான கல்வி, வேலைவாய்ப்பு, பெண்களுக்கான வாக்குரிமை என சமூகநீதி வாயிலான சமத்துவ வளர்ச்சியை முன்னிறுத்தியது. 1967 முதல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் இந்த சமச்சீரான சமூகநீதி அடிப்படையிலான வளர்ச்சியையே பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னெடுத்தனர். அதைத்தான் திராவிட மாடல் என்ற பெயருடன் தற்போது தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறோம். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கோ, ஒரு குறிப்பிட்ட பாலினத்திற்கோ மட்டுமே வாய்ப்புகள் என்றில்லாமல் கல்வி, அடிப்படைக் கட்டமைப்புகள், வேலைவாய்ப்பு, தொழில் முதலீடு ஆகியவற்றைப் பரவலான அளவில் செயல்படுத்தி, ஏற்றத்தாழ்வு என்கிற இடைவெளியைக் குறைக்கின்ற வகையில் திட்டங்களைச் செயல்படுத்கின்ற மாடல்தான் திராவிட மாடல்.

மாநகரத்தில் உள்ளவர்களுக்கு கிடைப்பதுபோலவே கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்கும் அவரவர் ஊர்களுக்குப் பக்கத்திலேயே உயர்கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி, தலைநகரத்திற்கு வந்து செல்லக்கூடிய கட்டமைப்புகள் அனைத்தும் கொண்டது திராவிட மாடல். ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்பதுதான் திராவிட மாடலுக்கு எளிமையான விளக்கம்!

கேள்வி: மாநில சுயாட்சி குறித்த ராசமன்னார் குழு அளித்த அறிக்கையைச் சட்டப்பேரவையில் தி.மு.க அரசு நிறைவேற்றி 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 50 ஆண்டுகளில் நடந்துள்ள பெரும் அதிகாரக் குவியலை எப்படி நோக்குகிறீர்கள்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்: பன்முகத்தன்மை கொண்ட பல மொழிகள் பேசக்கூடிய – பலவித பண்பாடுகளைக் கொண்ட மக்கள் வாழக்கூடிய இந்தியாவின் ஒருமைப்பாடு என்பது கூட்டாட்சிக் கருத்தியலின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது. மக்களை நேரடியாக சந்திக்கிறவர்களாகவும், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றக் கூடிய இடத்தில் உள்ளவர்களாகவும் மாநில அரசாங்கத்தினர்தான் இருக்கிறார்கள். அதனால் மாநிலங்களுக்கே கூடுதல் அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பதைத்தான் 1969-இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்.

அதனடிப்படையில் அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜமன்னார் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து, 1974-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றினார். மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் தி.மு.கவின் உறுதியான நிலைப்பாடு.

அதற்கு மாறான வகையிலே, மாநில அரசிடம் இருக்கக்கூடிய உரிமைகளையும் பறிக்கின்ற ஒன்றிய அரசு டெல்லியிலே அமைந்துள்ளது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி, சுகாதாரம் போன்ற மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள் ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின் திட்டம், ஜி.எஸ்.டி. என மாநிலங்களின் அதிகாரத்தை முற்றிலுமாகப் பறிக்கும் செயல்பாடுகள் மிக அதிகமாக நிறைவேறியுள்ளன.

கேள்வி: அமலாக்கத்துறை, வருமானவரித் துறை போன்ற விசாரணை அமைப்புகள் ஒன்றிய அரசின் அரசியல் கருவிகளாக மாறி வருவதையும் அது இந்தியா ஜனநாயகத்தைச் சிதைப்பதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்: சுதந்திரமான விசாரணை அமைப்புகளை ஒன்றிய பா.ஜ.க அரசு தன் கைப்பாவையாகப் பயன்படுத்துகிறது என்பதை எதிர்க்கட்சிகளான நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. மக்களே அதைச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

பா.ஜ.க. ஆட்சியல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சியினர் மீதுதான் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவை பாய்கின்றன. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள ஊழல் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஏற்கனவே ஊழல் புகாருக்கு ஆளான எதிர்க்கட்சி பிரமுகர் திடீரென பா.ஜ.க. பக்கம் சென்றுவிட்டால் உடனே அவரை புனிதராக்கி, அமைச்சர் பதவி கொடுக்கும் அளவிற்குக் கறை நீக்கக்கூடிய ‘அற்புத வாஷிங் மிஷின்’ பா.ஜ.க.விடம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டு விட்டார்கள்.

தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜக.. அல்லாத கட்சியினர் மீதான பாய்ச்சல்கள் இன்னும் கூடுதலாக இருக்கும். அதனை எதிர்கொள்வதற்கான வலிமை இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உண்டு. பா.ஜ.க.வை முழுமையாக அம்பலப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அது அமையும்.

கேள்வி: ஆளுநர் பதவியைப் பற்றி பல ஆண்டுகளாகத் திமுக விமர்சனத்தைக் கொண்டுள்ளது. 1967-இல் இருந்து தி.மு.க ஆளுங்கட்சியாகவோ வலிமையான எதிர்க்கட்சியாகவோ தொடர்ந்து இருந்து வருகிறது. ஆளுநர்கள் போடும் முட்டுக்கட்டைகளை மீறித் தமிழ்நாடு எப்படி தனது அரசியல் அபிலாஷைகளை நனவாக்குகிறது?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீறிய அதிகாரம், நியமனப் பதவியான ஆளுநருக்குக் கிடையாது என்பதைத் தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பேரறிஞர் அண்ணா, கருணாநிதி காலத்திலிருந்தே ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் என்றும், ஆளுநர் பதவி அவசியம் என்றால் அது மாநில அரசின் பங்களிப்போடு, தேர்ந்தெடுக்கும் முறையில் அமைந்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்துள்ளோம். அண்மைக் காலமாக வெளிப்படையான அரசியல்வாதிகளைப் போல ஆளுநர்கள் செயல்படுவதைத் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளம், தெலங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் காண்கிறோம். ஆளுநரின் அதிகார வரம்புமீறல்களைச் சட்டமன்றத்தில் எதிர்கொண்டு முறியடித்தோம். நீதிமன்றத்திலும் சட்டவழியில் போராடிக் கொண்டிருக்கிறோம். அரசியல்சட்டத்தை மதிக்காமல், ஜனநாயகத்தின் மாண்புகளைக் கெடுக்கும் வகையில் ஆளுநர்களை வைத்து இணை அரசாங்கம் நடத்த முற்படும் ஒன்றிய பா.ஜ.க அரசின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.

கேள்வி: 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற உதவும் காரணிகளாக எவை இருக்கும்? தோற்கடிக்க முடியாத கட்சி எனப் பா.ஜ.க தங்களைப் பற்றி முன்னெடுத்து வரும் பரப்புரை 2004-இல் இந்தியா ஒளிர்கிறது என அவர்கள் கூறியதை நினைவுபடுத்துகிறதே. மோடியை வெல்வது உண்மையில் சாத்தியமா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்: ஜனநாயக நாட்டில் யாரும் நிரந்தரமாக முடிசூட்டிக் கொள்ள முடியாது. 2004-இல் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நினைத்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் அதற்கு எதிர்மறையாக அமைந்தன. பத்தாண்டு கால பா.ஜ.க .ஆட்சியில் இந்தியாவில் பெரும் தொழிலதிபர்கள் தவிர வேறு எந்த ஒரு தரப்பினரும் நிம்மதியாக இல்லை. உழவர்கள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், மாணவர்கள், சிறுபான்மையினர், பட்டியலின மக்கள் எனப் பல தரப்பினரும் எதிர்கொள்கின்ற சிக்கல்களே இந்தியா கூட்டணிக்குச் சாதகமானதாக அமையும். யார் பிரதமராக வரவேண்டும் என்பதைவிட, மீண்டும் யார் வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அது தேர்தல் முடிவுகளில் தெரியும்.

கேள்வி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்:மு.க.ஸ்டாலினைக் கட்சியின் தலைவர் பொறுப்பில் அமர வைத்த தொண்டர்களின் உழைப்பும், மக்களின் நம்பிக்கையும்தான் முதலமைச்சர் ஸ்டாலின் என்ற பொறுப்பை வழங்கியிருக்கிறது. வெற்றிச் சான்றிதழைப் பெற்றபிறகு, கருணாநிதியின் நினைவிடத்தில் நான், “வாக்களித்தோர் மனநிறைவு கொள்ளும் வகையிலும், வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கக்கூடிய வகையிலும் அனைவருக்குமான ஆட்சியாக இருக்கும்” என்று உறுதியளித்தேன். அதனை முழுமையாக நிறைவேற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலினாகிய நான், கட்சித் தொண்டர்கள் எதிர்பார்ப்பதுபோல, தி.மு.க ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் வகையிலான கட்சித் தலைவர் ஸ்டாலினாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி: பா.ஜ.க மீது நீங்கள் தொடர்ந்து வைக்கும் குற்றச்சாட்டுகளாலும் அவர்களுக்கு எதிராகத் தேசிய அளவில் நீங்கள் கூட்டணியைக் கட்டமைப்பதாலும்தான் ஒன்றிய அரசு உங்களைக் குறிவைக்கிறது எனக் கருதுகிறீர்களா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்: எதிர்ப்புகளோ தாக்குதல்களோ எனக்கோ தி.மு.க.வுக்கோ புதிதல்ல. எப்போதெல்லாம் ஜனநாயகத்திற்கு ஆபத்து நேர்கிறதோ அப்போது எதிர்ப்புக் குரல் கொடுக்கும் இயக்கங்களில் முதன்மையானது திராவிட முன்னேற்றக் கழகம்.

ஆதரித்தாலும் – எதிர்த்தாலும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர் கலைஞர் கருணாநிதி என்று சொன்னவர் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அம்மையார். நான் கருணாநிதியின் மகன். ஆதரிக்க வேண்டிய நல்லவற்றை ஆதரிப்பதிலும் உறுதியாக இருப்பேன். எதிர்க்க வேண்டிய தீமைகளை எதிர்ப்பதிலும் உறுதியாக இருப்பேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %