நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், பா.ஜ.க.வுடன் தனது கட்சியை இணைத்தார் சரத்குமார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமாரை, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் பேசினர்.
அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் சரத்குமார், “பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைக்கிறேன். வருங்கால இளைஞர்களின் நலனுக்காக, மக்கள் நன்மைக்காக பா.ஜ.க.வுடன் ச.ம.க. இணைத்துள்ளேன்” என்று அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், சரத்குமார் திடீரென அறிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், “பெருந்தலைவர் காமராஜர் போல் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நடத்தி வருகிறார். நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு; மக்கள் பணியில் நாங்கள் தொடர்கிறோம்” என்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “சரத்குமாரை தமிழகத்தில் அடைத்து வைக்க பா.ஜ.க. விரும்பவில்லை; சரத்குமார் தேசியத்திற்கு தேவைப்படுகிறார்” எனத் தெரிவித்தார்.