நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மகாலில் அதிமுக சார்பில் ரமலான் இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று நோன்பு திறந்தார். இந்நிகழ்ச்சியில் கே.பி முனுசாமி, திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், பொன்னையன் வளர்மதி, எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், அன்வர் ராஜா உள்ளிட்ட அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:
“சாபர் சாதீக் திமுகவின் அயலக அணியில் பொறுப்பில் உள்ளவர். முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரையும் சந்தித்து நிதி கொடுத்துள்ளதாகப் புகைப்படம் வெளியாகி உள்ளது. போதை பொருள் கடத்தியவரைக் கைது செய்துள்ளனர். அவரை விசாரணை செய்து முழு விவரங்களை வெளியிட வேண்டும்.
முதலமைச்சரையும் வலியுறுத்தி உள்ளேன் இதுவரை போதை பொருள் தொடர்பாக ஒரு அறிக்கை கூட முதலமைச்சர் வெளியிடவில்லை. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என ஓ.பன்னீர் செல்வம் விரக்தியின் விளிம்பிலிருந்து கொண்டு பேசி வருகிறார். ஒரு ஜோக்கர் ஆக இருந்தால் என்ன செய்வது.தேமுதிகவுடன் நாங்கள் தற்போது வரை பேசி வருகிறோம்.
பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது தெரிவிப்போம். பாஜக தலைமையிலான மூன்றாவது அணியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. திமுக தான் CAA சட்ட விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. சிறிய சிறிய கூட்டணிக் கட்சிகள் எங்களுக்கு இடம் பெறுகிறது.மன்சூர் அலிகான் ஆதரவு தான் தெரிவித்திருக்கிறார்.
இன்னும் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை. கூட்டணி விரைவில் முடிவாகும். இன்னும் நாட்கள் இருக்கிறது. தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள். இருக்கிற காலத்தில் நிறைய பேர் கட்சியை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் எல்லாம் செல்லாக் காசாகப் போய்விட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் 40 தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்வோம்.
மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தமிழ்நாட்டில் வந்து போதை பொருள் புழக்கத்தை கண்டு பிடித்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் தமிழ்நாடு காவல்துறை தூங்குகிறதா. தேர்தலை முன்னிட்டு தான் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையை திமுக கொடுத்தது. நாங்கள் 1500 ரூபாய் கொடுப்போம் என எங்கள் தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியுள்ளோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” இவ்வாறு அவர் பேசினார்.