கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே பிரதமர் மோடி வருகையையொட்டி நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும். என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது தான் குடியுரிமை திருத்தச் சட்டம். அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு துருபிடித்துப் போன பழைய அஸ்திரத்தை இன்றைக்கு பா.ஜ.க. கையில் எடுத்து, மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்குத் தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை பா.ஜ.க. அறிமுகப்படுத்தியிருக்கிறது. பதவிக் காலம் முடியும் நேரத்தில் தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் பட்டியலை வெளியிட வேண்டுமென்ற உச்சநீதின்றத் தீர்ப்பு பா.ஜ.க.வுக்கு மரணஅடியாக விழுந்துள்ளது. அதிலிருந்து தப்பிக்கவும், மக்களை திசைதிருப்புவதற்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை பா.ஜ.க. நிறைவேற்ற முயற்சி செய்கிறது.
ஆனால், எத்தகைய முயற்சிகள் எடுத்தாலும் பா.ஜ.க.வின் வீழ்ச்சியை தடுக்க முடியாது. சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் கைவிடும் சட்டம் தான் பா.ஜ.க.வின் குடியுரிமை திருத்தச் சட்டம். இந்த சட்டம் இஸ்லாமியர் மீதான வெறுப்பை விதைக்கிறது. மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது அரசமைப்புச் சட்டம். ஆனால், மத சிறுபான்மையின மக்களை புறக்கணிக்கிற ஒரு சட்டத்தை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடுவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் இதை அமல்படுத்த முயல்வதை விட ஒரு ஜனநாயக விரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.