அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ளதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “வரும் மார்ச் 24- ஆம் தேதி திருச்சியில் நடக்கும் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளோம். 40 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து பரப்புரையைத் தொடங்குகிறோம். 2011-ஆம் ஆண்டு அமைத்த வெற்றிக் கூட்டணியை மீண்டும் அமைத்துள்ளோம்.
வெற்றிலைப் பாக்கை மாற்றி உறுதிச் செய்துவிட்டோம்; தேதி பின்னர் அறிவிக்கப்படும். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் யார் போட்டியிடுவார் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு முதன் முறையாக வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினார்.