0 0
Read Time:4 Minute, 18 Second

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் நேற்று இரவு மயிலாடுதுறை பெருமாள் கோயில் தெற்கு வீதி பகுதியில் அவரது இருசக்கர வாகனத்தில் உறவினர் சரவணனுடனும், தனது வளர்ப்பு நாயுடன் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று அவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டியது. இதில் தலை முழுவதும் சிதைந்து போன நிலையில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த சரவணன் கையில் வெட்டுகாயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட தப்பித்து ஓடி, ஒரு வீட்டிற்குள் புகுந்து கொல்லைபுறமாக சென்று இருட்டில் பதுங்கியுள்ளார்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சரவணனை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின் இறந்த அஜித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீனா நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற பாமக பிரமுகர் கண்ணன் படுகொலையில் அஜித்குமாரும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

தற்போது ஜாமீனில் வெளியே உள்ள நிலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அப்போது சாதி மோதல் ஏற்படாமல் தடுக்க அஜித்குமார் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் வசிக்கும் கலைஞர் காலனி பகுதிக்கு பல மாதங்களாக காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படுகொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். படுகொலை காரணமாக மேலும் மோதல்கள் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித்குமார் உறவினர்கள் மருத்துவமனை அருகே மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பேருந்துகள் மாற்றிவிடப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
பேருந்து நிலையம் பகுதிக்கு வந்து மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால்
பேருந்து நிலையத்திற்கு பேருந்து வருவதை தடைசெய்த போலீசார் புறநகர் பகுதி
வழியாக பேருந்தை மாற்றி விட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு
எட்டப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் மயிலாடுதுறை நகரம்
முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %