0 0
Read Time:8 Minute, 50 Second

DMK vs AIADMK vs BJP : மக்களவை பொதுத்தேர்தல் (Lok Sabha Election 2024) தேதிகள் மற்றும் அட்டவணை மார்ச் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. நாடு முழுவதும் 7 கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவிலேயே தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியின் 1 தொகுதியிலும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 20ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், காங்கிரஸ், நாம் தமிழர் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர் எனலாம். இம்முறை தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி (INDIA Alliance), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA Alliance) மற்றும் அதிமுக கூட்டணி (AIADMK Alliance) என மும்முனை போட்டி நிலவும் சூழலில், திமுக – அதிமுக – பாஜக ஆகிய கட்சிகளும் தங்களின் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளன.

இதில் ஆளும் திமுக 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. மேலும், நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். பாஜக 19 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும் சூழலில், தாமரை சின்னத்தில் மட்டும் 23 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. அதிமுக நேரடியாக 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது, மேலும் கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ அதிமுக சின்னத்தில் நிற்பதால் மொத்தம் 34 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இந்த மக்களவை தேர்தலில் பல நட்சத்திர வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர் எனலாம். திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன், டி.ஆர். பாலு, ஆ. ராசா, கனிமொழி என பல சிட்டிங் எம்.பி.,கள் களம் கண்டுள்ளனர். பாஜக தரப்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பினோஜ் பி செல்வம், ராதிகா சரத்குமார் என பெரும் படையே களமிறங்குகிறது.

பரபரப்பான சூழலில் தேர்தல் களம்

மறுபுறம் அதிமுகவிலோ பெரும்பாலும் புதுமுகங்களே இடம்பெற்றுள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பாஜக கூட்டணியில் ராமநாதபுரத்தில் இரட்டை இலையை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் வரும் மார்ச் 27ஆம் தேதியோடு நிறைவடையும் நிலையில், மார்ச் 30ஆம் தேதிக்குள் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் 5இல் மட்டும் திமுக – அதிமுக – பாஜக ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. மற்ற இடங்களில் கூட்டணி கட்சிகளுடனே இந்த கட்சிகள் மோதுகின்றன. இந்நிலையில், திமுக – அதிமுக – பாஜக மோதும் நேரடி தொகுதிகள் என்னென்ன அதில் யார் யார் போட்டிகிறார்கள் என்பதை இதில் காணலாம்.

தென் சென்னை

இந்த தேர்தலில் மிக அதிக கவனம் பெறும் தொகுதியாக மாறியிருக்கிறது தென் சென்னை தொகுதி. வேளச்சேரி, பள்ளிக்கரணை என மழை வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட இடமாகும். எனவே, ஆளும் கட்சி மீதான எதிர்ப்பலையை பயன்படுத்தி தொகுதியை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டியுள்ளன. திமுக சார்பில் சிட்டிங் எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் இதிலும் போட்டியிடுகிறார். பாஜக தரப்பில் தமிழிசை சௌந்தரராஜனும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்த்தனும் போட்டியிடுகின்றனர். இதில் யாருக்கு வெற்றிக் கனி கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீலகிரி

தனித் தொகுதியான நீலகிரியில் தற்போது திமுக சார்பில் ஆ.ராசா எம்.பியாக உள்ளார். திமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான இவரை வீழ்த்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனை பாஜக களமிறக்கியிருக்கிறது. அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் போட்டியிட உள்ளார். இதில் ஆ.ராசா 2009ஆம் ஆண்டு வெற்றி பெற்றிருந்த நிலையில், 2014இல் தோல்வியை தழுவினார். கடைசியாக 2019இல் மிகப்பெரிய வெற்றியை அவர் பெற்றிருந்தார். இதற்கு 1996, 1998, 1999, 2004 ஆகிய நான்கு மக்களவை தேர்தல்களில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு 1998இல் மட்டுமே தோல்வியடைந்தார், ஆ.ராசா.

கோவை

கொங்கு மண்டலத்தில் திமுக பலமானது இல்லை என்பது பொதுக்கருத்து, அதனை முறியடிக்க வேண்டும் என்பதற்காக சிபிஎம் கட்சியிடம் இருந்து திமுக கோவையை பெற்று அங்கு தனது வேட்பாளராக கணபதி பி ராஜ்குமார் என்பவரை நிறுத்தியுள்ளது. ஆனால், பாஜக இங்கு தனது மாநில தலைவர் அண்ணாமலையை நிறுத்தியிருக்கிறது. கோவையில் பாஜகவுக்கு சற்று ஆதரவு இருப்பதாக கூறப்படும் நிலையில் அங்கு அண்ணாமலை போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சிங்கை ராமசந்திரன் போட்டியிடுகிறார். நேற்று அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் I’m Waiting என விஜய் பட பாணியில் X தளத்தில் பதிவிட்டிருந்தது வைரலாகி இருந்தது.

உதயசூரியன் – இரட்டை இலை – தாமரை

இதுமட்டுமின்றி வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் பசுபதி, பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ. சி. சண்முகம் போட்டியிடுகிறார். அதேபோல், பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் கே.என். நேரு மகன் அருண் நேரு, அதிமுக சார்பில் சந்திரமோகன், பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் ஜஜேகே கட்சியின் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதவாது, உதயசூரியன் – இரட்டை இலை – தாமரை ஆகியவை இந்த 5 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %