நாகையில் ஆன்லைன் வகுப்பிற்காக டேப் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகிறது.
வேதாரண்யம் அடுத்த தகட்டூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் சீதா தம்பதியினரின் மகன் சுதாசன், அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். பெருந்தொற்று நிவாரணத்திற்கு பொதுமக்கள் நிதி வழங்க வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை தொலைக்காட்சிகளில் பார்த்த சிறுவன், தானும் நிதி வழங்க வேண்டும் என பெற்றோரிடம் கூறியுள்ளான். அதனை தொடர்ந்து தனது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற சிறுவன், டேப் வாங்குவதற்கு வைத்திருந்த 10 ஆயிரத்து 135 ரூபாய்கான காசோலையை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரிடம் வழங்கினார். பெருந்தொற்று பிடியில் பலர் உயிரிழந்து வரும் நிலையில் உயிர் முக்கியமா? டேப் முக்கியமா என்று பார்த்தேன் என்றும் உயிர்தான் முக்கியம் என்பதால் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளதாக சிறுவன் சுதாசன் தெரிவித்தார்.