0 0
Read Time:7 Minute, 43 Second

சென்னை: அண்ணாமலையுடன் ரகசிய கூட்டணி வைத்து திருமாவளவன் என்னை வேட்பாளராக அறிவிக்க விடாமல் தடுத்துள்ளார் என தடா பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக பட்டியல் அணி மாநிலத் தலைவரான தடா பெரியசாமி, இன்று பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தடா பெரியசாமி, நக்சல்பாரி இயக்கத்தில் இருந்த போது, அரியலூர் மருதையாற்றுப் பாலம் குண்டு வெடிப்பில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அந்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்று, பின்னர் விடுதலையாகி அரசியலுக்கு வந்தவர் தடா பெரியசாமி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுடன் இணைந்து பயணம் செய்தவர், அதன்பிறகு 2004ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் சிதம்பரத்தில் போட்டியிட்டார். பாஜக சார்பில் போட்டியிட்ட தடா பெரியசாமியும் விசிக சார்பில் போட்டியிட்ட திருமாவளவனும் தோல்வியடைந்தனர். பாமக வேட்பாளர் பொன்னுசாமி வெற்றி பெற்றார். தடா பெரியசாமி பிரித்த வாக்குகள்தான் அந்த தேர்தலில் திருமாவளவன் தோல்விக்கு காரணம் என்றும் கூறப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார் தடா பெரியசாமி. இந்த லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்தார் தடா பெரியசாமி. பெரியசாமிதான் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று பாஜகவினரும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், வேலூரைச் சேர்ந்த முன்னாள் மேயர் கார்த்தியாயினி, சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அதிர்ந்து போனார் தடா பெரியசாமி
இந்நிலையில் தான் இன்று அவர் அதிமுகவில் இணைந்துள்ளார். தன்னை நிறுத்தாமல் கார்த்தியாயினியை தலைமை, வேட்பாளராக அறிவித்தாலும் அதிருப்தியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கார்த்தியாயினிக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆனால் கார்த்தியாயினி தரப்பு இவரை மதிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தற்போது அவர் அதிமுகவில் இணைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்குச் சென்று, ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துகொண்டார் தடா பெரியசாமி. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தடா பெரியசாமி, “பாஜகவின் தவறான முடிவுகளால் அழுத்தம் ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளேன். எனது சொந்த தொகுதி சிதம்பரம். திருமாவளவன் இந்த தொகுதியில் எம்.பியாக உள்ளார். அவர் எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை. சிதம்பரம் தொகுதியில் நான் வேட்பாளராக நிற்பதற்கு வேலைகளை செய்து வந்தேன். பாஜகவும் அந்த தொகுதியில் என்னை வேலை பார்க்கச் சொன்னது. ஆனால், திடீரென வேறு ஒரு வேட்பாளரை அறிவித்தனர். சிதம்பரம் தொகுதியில் கட்சிக்காக நான் நிறைய வேலைகளை செய்து வைத்திருந்தேன். ஆனால், என்னை கேட்காமல் வேறு வேட்பாளரை நிறுத்தியது எனக்கு மிகப்பெரிய வருத்தம்.

சிதம்பரம் தொகுதியில் நான் நின்றால் திருமாவளவன் ஜெயிக்க முடியாது என்பதை உணர்ந்து அண்ணாமலையுடன் ரகசிய கூட்டணி வைத்து திருமாவளவன் என்னை வேட்பாளராக அறிவிக்க விடாமல் தடுத்துள்ளார். இது மிகப்பெரிய சதி. திருமாவளவனை வெற்றி பெற வைப்பதற்காக பாஜக துணை போயுள்ளது. அண்ணாமலை எடுத்தது தவறான முடிவு. அண்ணாமலை, எல்.முருகன், கேசவ விநாயகம் இவர்கள் மூன்று பேரின் திட்டம் தான் இது. இவர்கள் மூன்று பேர் தான் கட்சியா? சிண்டிகேட்டை உருவாக்கி ஆளுக்கு ஒரு தொகுதி என பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். திருமாவளவன் தனிப்பட்ட முறையில் அண்ணாமலையிடமும், எல்.முருகனிடமும், கேசவ விநாயகமிடமும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள். திருமாவளவனின் சதி திட்டத்திற்கு பாஜகவை அடமானம் வைத்து விட்டார்கள். எனது தொகுதிக்கு வந்தபோதுகூட அண்ணாமலை என்னிடம் இந்த தொகுதியில் நிற்பீர்களா என்று கேட்டார். வாய்ப்பு கொடுத்தால் நிற்பேன் என்றேன். அவர் தான் இந்த தொகுதியில் வேலையை தொடங்குங்கள் என்றார். அவரை நம்பி தொகுதியில் வேலை பார்த்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. வேட்பாளார் அறிவிக்கப்பட்டதுமே நான் அண்ணாமலைக்கு “தவறான முடிவு” என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். கட்சி எடுத்த முடிவு என்று பதில் சொன்னார்.

பட்டியலின சமூகத்தினருக்கு பாஜகவில் அங்கீகாரம் இல்லை. எனவே தான், எனக்கான அங்கீகாரத்தை தேடும் வகையில் அதிமுகவில் இணைந்துகொண்டேன். பாஜகவில் ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உழைப்பவர்களுக்கு அக்கட்சியில் அங்கீகாரம் இல்லை. ஒரு வாரத்தில் நிறைய பேர் பாஜகவில் இருந்து கட்சி மாறுவார்கள். பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வாய்ப்பு கொடுத்தால் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன்.” எனத் தெரிவித்துள்ளார் தடா பெரியசாமி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %