தமிழகம் முழுவதும் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் தொடங்கியது. சென்னை மாவட்டத்தில் 39 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வேப்பேரியில் உள்ள குடியிருப்புகளில் பூத் ஸ்லிப் எனப்படும் வாக்குச்சாவடி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தகவல் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி நடைபெற்றது. அப்போது, அந்த பணியை ஆய்வு செய்த பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான டாக்டர் ராதாகிருஷ்ணன், வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
வட மாநிலங்களைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பூத் ஸ்லிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல், தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான சாந்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வாக்குப்பெட்டி வைக்கவுள்ள இடத்தையும் அவர் பார்வையிட்டார்.
தென்காசி மாவட்டத்தில் வாக்காளர்கள் அனைவருக்கும் பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக ஐயாபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி நடைபெற்றது. இதேபோல் தமிழகம் முழுவதும் பூத் ஸ்லிப் வழங்கும் பணி நடைபெற்றது.